குறையுள்ள அழகே முழுமை
நான் எழுதிய ஒரு கதையை மிக ஆவலோடு அந்தச் செயற்கை நுண்ணறிவிடம் (AI) பகிர்ந்தேன். அது ஒரு தேர்ந்த விமர்சகனைப் போல என் கதையை அலசியது.
கற்பனைத் திறன், இலக்கிய நயம், சித்தாந்தம் என ஒவ்வொன்றையும் வரி வரியாகப் பிரித்து மேய்ந்து, ஒரு நீண்ட பட்டியலைத் தந்தது. "இந்த வரிகளில் தர்க்கம் இடிக்கிறது," "இங்கே கற்பனை போதாது" எனச் சுட்டிக்காட்டிய அது, இறுதியில் சொன்னது: "நீங்கள் அனுமதித்தால், உங்கள் கதையைச் சிதைவில்லாத ஒரு முழுமையான படைப்பாக என்னால் மாற்றித் தர முடியும்."
நான் சற்று யோசித்தேன். அந்தச் 'முழுமை' எனக்கு அந்நியமாகத் தெரிந்தது.
"வேண்டாம்," என்றேன் மெல்லிய புன்னகையுடன்.
இந்த உலகில் எதுவுமே நூறு சதவீதம் சரியானவை அல்ல. காலையில் மலரும் பூவில் ஒரு இதழ் சுருங்கியிருக்கலாம், முழு நிலவில் ஒரு கறை இருக்கலாம். அந்தச் சிறு குறைகள்தான் அந்தப் படைப்பிற்கு ஒரு தனித்துவத்தைத் தருகின்றன. எல்லாம் சரியாக, துல்லியமாக அமைந்துவிட்டால், அங்கு வாழ்வதற்கு என்ன சுவாரசியம் இருக்கும்?
முழுமை என்பது ஒரு தேக்கம். ஆனால், குறைகள்தான் மாற்றத்திற்கான தொடக்கம். நம்மிடம் உள்ள சிறு சிறு பேதாமைகளைச் சமாளிக்கவும், அதைக் கடந்து வாழவும் தான் இறைவன் நமக்கு மனவலிமையைத் தந்து சவால் விடுகிறான். அந்தப் போராட்டத்தில்தான் வாழ்வின் சுவை இருக்கிறது.
என் கதையின் 'அழகான பிழைகளோடு' நான் நிம்மதியாக இருந்தேன்.
Comments
Post a Comment